சென்னை: பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை முழுமையாக எடுத்த பிறகு படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கேட்போம். மீனவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை கேட்டிருக்கிறார்கள். கணக்கெடுப்பு முழுமையாக எடுத்த பிறகு நிவாரணம் வழங்கப்படும். பைபர் படகுகள் கணக்கெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. எல்லா படகுகளும் கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டங்களில் ஆங்காங்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள், ஆட்சித்தலைவர்கள் இருக்கிறார்கள், குறிப்பு வருகிறது. தேவைப்பட்டால், அமைச்சர் அவர்களோ அல்லது நானோ போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் போவோம்.
மாண்டஸ் புயலால் எவ்வளவு தொகை நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்ற கணக்கெடுப்பு வரவில்லை. முழுமையாக வந்தபின் சொல்கிறேன். ஏனென்றால். இன்று ஒன்று சொல்லிவிட்டு, நேற்று இப்படி சொன்னீர்களே, நாளை இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் சொல்லக் கூடாது.
மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். திருப்தியாக இருப்பது மட்டுமல்ல, ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். அதனால்தான், அரசு முறையாக உரிய வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.