நேற்று தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்தது. இதனால் தமிழகத்தில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது.
மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பாங்கள் சரிந்து விழுந்தன. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாண்டஸ் புயலால் சேதம் அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.