சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் சராசரியாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிச.10) அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதன்படி நேற்று (டிச.9) காலை 8.30 மணி முதல் இன்று (டிச.10) காலை 8.30 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல் மற்றும் பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ, காஞ்சிபுரம் 19 செ.மீ, செய்யாறு 18 செ.மீ. ஆவடி 17 செ.மீ, திருத்தணியில் 16 செ.மீ, பள்ளிப்பட்டு, எம்ஜிஆர் நகர், ஆலந்தூர், ஊத்துக்கோட்டை, தாம்பரம்,சோழவரம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ, அம்பத்தூர், கொரட்டூர், விமான நிலையம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் சராசரியாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மேலும் இன்று (டிச.10) திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.