வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலின் தாக்கம் காரணமாக மோசமான வானிலை நிலவக்கூடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் மாநகர மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவைகள் புயல் கரையை கடக்கும் ஆறு மணி நேரத்திற்கு ரத்து செய்வதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் புறநகர் ரயில் சேவையை நிறுத்தி வைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே ஆலோசனையில் இறங்கி உள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது காற்று அதிவேகத்தில் வீசு கூடும் என்பதால் மின்சார ரயிலால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மின்சார சேவை நிறுத்த கூடும். இதன் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவையை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே ஆலோசனையில் இறங்கி உள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.