மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கும்,  சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். மேலும், மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார்.‘

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் பலத்த சூறைக்காற்று மற்றும் கனமழையுடன் நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.  அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்தன. மற்றும் மீனவர்களின் படகுகளும் சேதமடைந்தன. இந்த நிலையில்,   புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து சனிக்கிழமை சென்னை எழிலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்புப் படையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சனிக்கிழமை மதியத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துவிடும்.

புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாள்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும். பேருந்து போக்குவரத்து வழக்கம்போல் செயல்படுகிறது.  இன்று (சனிக்கிழமை)  மாலைக்குள் இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கட்டுமரம் முழுமையாக சேதமானால் ரூ.32 ஆயிரமும், புகுதி சேதமானால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். இன்னும் 2 – 3 நாள்களில் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பிப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.