சென்னை: காசிமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய சென்றபோது முதல்வர் கான்வாயில் தொங்கிக் கொண்டு மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பயணித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மாண்டஸ் புயலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி தென் சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், “முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு காசிமேடு துறைமுகம் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் அங்கு சென்று விட்டனர்.
அவர்களின் வாகனம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் கார் துறைமுகத்திற்கு உள்ளே வர தொடங்கியதை தெரிந்துகொண்டு இவர்கள் நடக்கத் தொடங்கினர். இதற்கிடையில் முதல்வர் வாகனம் வேகமாக செல்லத் தொடங்கியது. இதை பார்த்த உடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் முதல்வரின் கான்வாயில் ஏறி தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்” என்று கூறினார்.
சென்னை காசிமேட்டில் முதல்வர் ஆய்வுக்கு முன், கான்வாய் காரில் சென்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் | HTT #HTT #HinduTamil pic.twitter.com/nKQvMVLGeS
— Tamil The Hindu (@TamilTheHindu) December 10, 2022