சிங்கப்பூர் முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
தென் கிழக்கு ஆசிய நாடானா சிங்கப்பூரில் வசிப்பவர் சுரேந்திரன் சுகுமாரன், 30. இவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே காதல் முறிந்தது. இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கு முஹமது அஸ்லி முஹமது சலேஹ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முகமூடி அணிந்து சென்றார்.
அங்கு, 13வது மாடியில் வசிக்கும் அஸ்லியின் வீட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு, செருப்புகள் மற்றும் கதவுக்கு தீ வைத்தார். உள்ளேயிருந்த அஸ்லி, தன் வீட்டுக்கு வெளியே தீ எரிவதை உணர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் வந்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த முகமூடி அணிந்த உருவத்தை ஆய்வு செய்து அது, சுரேந்திரன் சுகுமாரன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுகுமாரனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement