சேலம்: வரதட்சணை கொடுமை யால் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் ணின் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி.,காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (50). இவரது மூத்த மகள் வசுமதி (23), இன்ஜினியர். இவருக்கும் நாமக்கல் நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி வசுமதி, தனது பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
அதில், திருமணம் ஆகி வந்த நாளில் இருந்து தன்னிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்து வருகிறார்கள். நம்ம குடும்பத்தை பற்றியும், என்னை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். தினமும் டார்ச்சர் செய்வதால், என்னால் இங்கு வாழ முடியாது. என்னை வீட்டிற்கு கூட்டிச் செல்லவும் எனக்கூறி கதறி அழுதுள்ளார். இதனால், தந்தை அத்தியப்பன் நல்லிபாளையம் சென்று தனது மகள் வசுமதியை அழைத்துக் கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த வசுமதி தூக்கு மாட்டியுள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசுமதி இறந்தார். இதுபற்றி அவரது தந்தை அத்தியப்பன், திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, இறந்த வசுமதியின் கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, நாத்தனார் காவியா ஆகிய 4 பேர் மீதும் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்திருப்பதால், திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான கணவர் வினோத் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே புதுப்பெண் வசுமதியின் உடல், பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, தனது மகள் சாவிற்கு காரணமான வினோத் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தால் தான் சடலத்தை வாங்கிக் கொள்வோம் எனக்கூறி தந்தை அத்தியப்பன் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.