வறுமையில் வாடும் நடிகையிடம் பண மோசடி: போலீசில் புகார்

இதயமலர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. அதன் பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்பட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு இயக்குனரான ஜெயதேவி நலம் நலமறிய ஆவல், விலாங்குமீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், புரட்சிக்காரன், பவர் ஆப் உமன் படங்களை இயக்கினார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

தற்போது ஜெயதேவி தன்னிடம் ஒருவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார். அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான், 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன், 41 திரைப்படங்களில் நடித்துள்ளேன். பல படங்களை இயக்கி உள்ளேன். இதுதவிர ஜெயதேவி பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக 21 படங்கள் தயாரித்துள்ளேன். இதனால் பெரும் நஷ்டம் அடைந்து வறுமையில் வாடுகிறேன். வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

கடந்த 2005ம் ஆண்டு பாடகர் ஹரிகரன் நடித்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட முயற்சி செய்தேன். அதற்காக எனக்கு 30 லட்சம் பணம் தேவைப்பட்டது. அப்போது எனக்கு ரகு என்பவர் அறிமுகமானார். ரகு தான் கோவையில் ஒரு பிரபல பைனான்சியர் என்றும் ஆர்.கே.மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். எனக்கு குறைந்த வட்டியில் 1 கோடி கடன் வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

அதற்காக முதல் மாத வட்டி 1.20 லட்சத்தை முன்னதாகவே தரவேண்டும் என்று கூறினார். நான் 1.20 லட்சம் பணத்தை கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி கடன் வாங்கி தரவில்லை. இதனால் நான், கொடுத்த 1.20 லட்சம் வட்டிப்பணத்தை கேட்ட போது முறையான பதில் இல்லை. எனவே சினிமா பைனான்சியர் ரகுவிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஜெயதேவி கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.