சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த ராம்நகர் 7வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவருடன் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரனும் இரு மகள்களும் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் வீடு கூரை வீடாக இருக்கக்கூடிய நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் அவர்களது வீட்டை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் அருகில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்காக சென்று உள்ளனர். அப்பொழுது அவர்கள் சென்ற சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் லட்சுமி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்றும் நோக்கில் பிடிக்கச்சின்ற ராஜேந்திரனும் தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார்.
அவர்கள் தவறி விழுந்த தண்ணீரில் ஏற்கனவே மின்கம்பி அறுந்து விழுந்து இருந்ததால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் லட்சுமியும் ராஜேந்திரனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயல் காரணமாக சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மின் இணைப்பு வழங்கும்பொழுது மின்வாரிய அதிகாரிகள் அனைத்து பகுதிகளையும் முழுவதும் சோதனை செய்துவிட்டு மின் இணைப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.