சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிச.10) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- சென்னை
- விழுப்புரம்
- திருவள்ளூர்
- வேலூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். > வானிலை முன்னறிவிப்பு
மாண்டஸ் புயல்: மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக மாறியது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு, சனிக்கிழமை அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரைக்கும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.