திருவனந்தபுரம்: சபரிமலையில் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதால் நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி 1,10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
கடந்த சில தினங்களாக சபரிமலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் நீண்ட நேரம் காத்துக்கிடப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பக்தர்களுக்கும், போலீசுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் 12 மணிநேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மரக்கூட்டம் பகுதியில் காத்திருந்த சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அங்கு ஏற்பட்ட கடும் நெரிசலில் 5 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த விவரம் கேரள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி அனில் கே. நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் உடனடியாக கூடி இது ெதாடர்பாக ஆலோசித்தது. அப்போது தரிசன நேரத்தை அதிகரிக்கவும், பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய உரிய வசதிகள் ஏற்படுத்தவும் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சபரிமலையில தரிசன நேரத்தை அதிகரிப்பது குறித்து தேவசம்போர்டு ஆலோசித்தது. இதையடுத்து நேற்று முதல் அரை மணி நேரம் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 11 மணிக்குப் பதிலாக 11.30 மணிக்கும் நடை சாத்த முடிவு செய்யப்பட்டது. மதியமும் அரை மணிநேரம் தரிசனத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார். இன்று (திங்கள்) ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு முன் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.