வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ,-ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு, ‘ஜி – 7’ நாடுகள் விதித்த விலை உச்ச வரம்புக்கு ஆதரவில்லை என்ற இந்தியாவின் அறிவிப்பை ரஷ்யா வரவேற்றுள்ளது.
![]() |
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் போரைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யாவின் பொருளாதாரத்தில், அதன் கச்சா எண்ணெய் விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, 60 அமெரிக்க டாலர்கள் என்ற விலையை, ஜி – 7 நாடுகள் சமீபத்தில் நிர்ணயித்தன.
![]() |
இதை, ஐரோப்பிய யூனியனும் ஏற்றது. இந்த விலையில் மட்டுமே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமென இந்த நாடுகள் உத்தரவிட்டன.
இந்த விலையை விட கூடுதலாக கச்சா எண்ணெய் விற்கப்பட்டால், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பிற சேவைகள் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விலை உச்ச வரம்புக்கு ஆதரவளிக்க இந்தியா மறுத்தது. இந்தியாவின் இந்த முடிவை, ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் வரவேற்றுள்ளார்.
இந்தியாவுக்கு தொடர்ந்து எண்ணெய் ‘சப்ளை’ செய்வதில், முழு ஆதரவு தருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
காப்பீடு உள்ளிட்ட இதர தடைகளை சமாளிக்க, இந்தியாவுக்கு பெரிய கப்பல்களை குத்தகைக்கு விடவும், கட்டுமானங்களில் ஒத்துழைப்பு தரவும் ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement