புதுடெல்லி: கருடா கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப் படையில் கருடா கமாண்டோ படைப் பிரிவு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இந்நிலை யில் இந்த கமாண்டோ படையில், பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில் பெண் அதிகாரிகளை யும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானப் படைமூத்த அதிகாரி ஒருவர் நேற்றுகூறியதாவது: கருடா கமாண்டோ படையில் விரைவில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்படுவர். அவர்கள் மரைன் கமாண்டோக்கள் (மார்க்கோஸ்) என்று அழைக்கப்படுவர்.
தேர்வில் பாகுபாடு இருக்காது: ஏற்கெனவே இந்திய கடற் படையிலும் பெண் அதிகாரிகளை சிறப்புப் பிரிவில் சேர்த்து வரும் நிலையில் தற்போது விமானப் படையிலும் பெண்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆள் தேர்வில் எந்தவிதபாகுபாடும் இருக்காது. ஆண்களைச் சேர்ப்பதற்கு என்னென்னவிதிமுறைகள் கடைபிடிக்கப்படு கிறதோ அவை அனைத்தும் பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் போது கடைபிடிக்கப்படும்.
கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளைச் சேர்ப்பதற்கு முன்புஅவர்களிடம் அதற்கு ஒப்புதல் பெறப்படும். தாமாகவே முன்வந்தால் மட்டுமே அவர்கள் கமாண்டோபடையில் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல்விமானப் படையின் போர் விமானங்களிலும் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப் போலவே இந்தியகடற்படையிலும் போர்க் கப்பல்களில் பெண் அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் ராணுவத்தில் உள்ள ஹெலிகாப்டர்களை இயக்கும் பொறுப்பில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்பட்டனர்.
ஆனாலும், ராணுவத்தின் காலாட் படை பிரிவில் கவச வாகனங்களை இயக்கும் பொறுப்பிலும், நேருக்கு நேர் போர் புரியும் பொறுப்பிலும் பெண்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.