புதுடெல்லி: சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ.1.35 கோடி பெற்றதாகவும், இது குறித்த கேள்விகள் எழுவதை தவிர்க்கவே காங்கிரஸ் கட்சி இந்திய – சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2005-2007 காலகட்டத்தில் சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ.1.35 கோடியை பெற்றுள்ளது. அந்நிய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கான கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி இந்த நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அனுமதித்திருந்தால் அக்கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி இருப்பேன். இதை தவிர்க்கவே அவர்கள் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே நிகழ்ந்த மோதலை எழுப்புகிறார்கள்.
இன்றைய கேள்வி நேரத்தின்போது பட்டியலிடப்பட்ட கேள்விகளில் 5-வது கேள்வி, ராஜிவ் காந்தி ஃபவுண்டேஷன் பணம் பெற்றது குறித்ததுதான். இது குறித்து நான் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே, காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமிய ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் தலைவர் ஜாகிர் நாயக்கிடம் இருந்தும் காங்கிரஸ் கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது. ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனின் தலைவர்களாக உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் நான் கேட்க விரும்புவது, ஜாகிர் நாயக் உங்களுக்கு எதற்காக ரூ.50 லட்சம் கொடுத்தார்?
இன்றைய தினத்தின் கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாததற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்தியா – சீனா மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க இருப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தெரிவித்தும், காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் இருப்பது பாஜக அரசு. பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. இந்த ஆட்சி இருக்கும் வரை நமது நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எவரும் அபகரிக்க நாங்கள் விட்டுவிட மாட்டோம். நமது ராணுவ வீரர்களின் நெஞ்சுறுதியை நான் பாராட்டுகிறேன்” என தெரிவித்தார்.
அமித் ஷாவின் பேட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கேள்வி எழுப்புவது இந்திய – சீன ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதல் குறித்துதான். இதற்கும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கும் தொடர்பு இல்லை. ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் மூலம் நாங்கள் தவறு இழைத்துவிட்டோம் என்றால் அரசு எங்களை தூக்கில் போடட்டும்” என காட்டமாக குறிப்பிட்டார்.