திருவண்ணாமலை: கனமழை மற்றும் பலத்த காற்று வீசியபோதும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையில் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் 8-வது நாளாக இன்று சுடர்விட்டு எரிந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக, 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டன. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காணலாம். இதற்காக 4,500 கிலோ நெய் மற்றும் 1,100 மீட்டர் காடா துணி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், மாண்டஸ் புயல் மற்றும் கன மழையிலும் பிரகாசமாக எரிந்து வருகிறது. திருவண்ணாமலையில் கடந்த 9-ம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலமாக வீசும் காற்று வீசுகிறது. இதன் தாக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நீடித்தது. அப்போதும் மழை மற்றும் காற்றை பொருட்படுத்தாமல், 8-வது நாளாக ‘மோட்ச தீபம்’ என அழைக்கப்படும் பரம்பொருளான அண்ணாமலையாரின் தீபத்தை பக்தர்கள் தரிசித்தனர். மகா தீப தரிசனத்தை வரும் 17-ம் தேதி அதிகாலை வரை தரிசிக்கலாம்.