தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனி சிபிசிஐடி போலீஸார் முதற்கட்டமாக மாணவர் உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மருத்துவ மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், மாணவி – பிரியங்கா, ரிஷிகாந்த், பவித்ரன் மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி, மைனாவதி, மாதவன், ரவிச்சந்திரன் என 14 பேரை கைது செய்தனர்.
மேலும் இடைத்தரகர்கள் மனோகரன், ஆறுமுகம், வேதாச்சலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு பின் இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரான ரஷீத் தாமாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுவரை மொத்தம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 18 பேர் கைதாகி பின் நீதிமன்ற ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஓராண்டுக்கு பின் தற்போது மீண்டும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்கள் 3 பேரை தேனி சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவர் இர்பானுக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியாக பெங்களூருவில் வசித்து வந்த பீகார் பொறியியல் பட்டதாரிகள் கிருஷ்ணா முராரியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாஹத்குமார் சிம்ஹா, ரகுவந்த் மணி பாண்டே ஆகிய 3 பேரிடம் தேனி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.