நான் என்ன மிருக காட்சி சாலை விலங்கா? – டாப்சி கோபம்

தமிழில் பிரபலமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகை டாப்சி. ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் போன்று துணிச்சலாக பேசக்கூடியவர். சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறவர். பொது இடங்களில் தன்னை துரத்தி துரத்தி படம் எடுப்பவர்களை கடுமையாக கண்டித்து வருகிறவர். ஒரு முறை புகைப்பட கலைஞர்களை நேரில் எச்சரித்து பரபரப்பு கிளப்பியவர்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடிக்க தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. என் குணம் பற்றி ஊடகங்களுக்கு நன்றாக தெரியும். எல்லோரும் அவரவருக்கு தெரிந்த வேலையை செய்வது போல நான் எனக்கு தெரிந்த நடிப்பை செய்கிறேன். மற்றவர்களிடமிருந்து நான் எந்த விதத்திலும் உயர்ந்தவள் அல்ல.

படப்பிடிப்பில் மட்டுமே கேமரா முன் நிற்பேன். நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது என்னை படம் எடுப்பதை விரும்பவில்லை. காரின் ஜன்னலில் கேமரா வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

நான் பாதுகாவலர்கள் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். அதைத்தான் விரும்புகிறேன். நான் பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும் நிலைக்கு என்னை தள்ளாதீர்கள். அப்படி வைத்துக் கொள்ளும்பட்சத்தில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம். அதனால் என்னை மரியாதையுடன் நடத்துங்கள். நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. என்னை கேமராவுடன் பின் தொடர்கிறீர்களே, நான் என்ன மிருக காட்சி சாலையின் மிருகமா?.

இவ்வாறு டாப்சி பதிலளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.