நிலவில் ஆய்வை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நேற்று முன்தினம் (11) பூமிக்குத் திரும்பியுள்ளது.
ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு அதன் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அது நேற்று முன்தினம் (11) இரவு 11.10 மணிக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரையிறங்கியது.
இந்த ‘ஓரியன்’ விண்கலம் கடந்த மாதம் 16 ஆம் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.
6 நாட்கள் பயணத்திற்கு பின் ‘ஓரியன்’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த ‘ஓரியன்’ விண்கலம் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது.
இந்த விண்கலம் நவம்பர் 25 ஆம் திகதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்து, மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.