மதுரை: `பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகூட இல்லை!' – ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்

கடந்த 13 வருடங்களில் செல்போன் பேசியபடி, பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் 205 பேரில், 6 பேரிடம் மட்டும் அபராதம் வசூலித்திருப்பதாக மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்டிஐ

இது குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற்றிருக்கும் சமூக ஆர்வலர் எம்.காசிமாயனிடம் பேசியபோது, “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சுமாா் 24,000 நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மதுரை போக்குவரத்து கழக கோட்டத்தில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் மட்டும் 1,004 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த 13 வருடங்களில் மதுரை மண்டலத்தில் பணியின்போது செல்போன் பேசிக்கொண்டு, பேருந்தை இயக்கிது எத்தனை பேர்? அவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது? என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தேன். அதற்கு கடந்த 13 ஆண்டுகளில் செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டியவர்கள் மொத்தம் 205 பேர் என்றும், இதில் 6 பேரிடம் மட்டும் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

காசிமாயன்

2010-ல் 28 பேர், 2011-ல் 20பேர், 2012 -ல் 14 பேர், 2013-ல் 12 பேர், 2014-ல் 14 பேர், 2015 -ல்13 பேர், 2016-ல் 8 பேர், 2017-ல் 24 பேர், 2018-ல் 7 பேர், 2019-ல்20 பேர், 2020-ல் 9 பேர், 2021-ல் 12 பேர் என 13 ஆண்டுகளில் மொத்தம் 205 பேர் செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதும், இதில் 6 பேரிடம் மட்டுமே அபராதம் ரூ.2,100 மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

செல்போன் பேசியபடி பொதுமக்கள் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டப்படி ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்போது, இவர்கள் மட்டும் மிகக் குறைவான தொகையை, குறைந்த நபர்களிடம் மட்டும் வசூலித்திருப்பது சரியா?

அடுத்ததாக, ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநா் இருக்கையின் பின்புறம் மருந்துகளுடன் முதலுதவிப் பெட்டி இருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி சான்றிதழை வழங்குவர். ஆனால், மதுரை கோட்டத்தில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி இல்லை. ஆனால், 3,500 பேருந்துகளுக்கு மேல் ரூ.15 லட்சம் செலவில் மதுரை கோட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் முதலுதவி பெட்டி முறையாக பராமரிக்கப்படுவதாக ஆர்.டி.ஐ-யில் தெரிவித்திருக்கின்றனர்.

முதலுதவி பெட்டி

அதேபோல, விபத்து நேரிட்டால் கண்ணாடிகளை உடைத்து தப்பிப்பதற்காக வைக்கப்படும் சுத்தியல், தீ அணைக்கும் கருவி, போன்றவை பெரும்பாலான பேருந்துகளில் இல்லை. நாங்கள் கள ஆய்வு செய்ததிலும், சில டிரைவர்களிடம் விசாரித்ததிலும் பெரும்பாலான பேருந்துகளில் முதலுதவி பெட்டி முறையாக வைக்கப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருப்பது தெரியவருகிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.