புதுச்சேரி: ”அரவிந்தரின் யோக சக்தி, ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாக உருவாகும்,” என, பிரதமர் மோடி பேசினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அரவிந்தரின் பிறந்த நாள் விழாவில், காணொலியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரவிந்தர் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு பேசியதாவது:
புதுச்சேரி மண்ணில் அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை இம்மாதிரியான நிகழ்ச்சிகள் கொடுக்கும்.
அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாக உருவாகும்.
இந்தியாவில் பல அவதார புருஷர்கள் உருவாகியுள்ளனர். அந்த வரிசையில், 1893ம் ஆண்டிற்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த ஆண்டில் தான் விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று சாதனை படைத்தார். காந்தி தென்னாப்பிரிக்கா சென்று சாதனை படைத்தார்.
அரவிந்தர் இங்கிலாந்தில் படிப்பை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பினார். எனவே, 1893ம் ஆண்டு என்பது ஒரு பொருத்தமான ஆண்டாக மூன்று பேருக்கும் அமைந்தது.
இது தேசத்தில் அனைவரையும் கவர்ந்தது. நண்பர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து அரவிந்தர் ஒரு தேச பக்தியாளராக உருவானார். அவரது பிறப்பு வங்காளத்தில் இருந்தாலும் கூட , குஜராத்தி மொழியை கற்றார். பல மொழிகளை நேசித்தார். அவர் புதுச்சேரியிலும், குஜராத்திலும் அதிக நாள் வாழ்ந்தார்.
சமீபத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில், மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இன்றைய தமிழ் இளைஞர்கள் விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது. அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார்.
தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்ல, ஆன்மிக சக்தியையும் மேலே கொண்டு வர வேண்டும் என விரும்பி, ஆன்மிக சக்தியின் உறுதியான நிலையை, சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார்.
அரவிந்தரின் பிறப்பு இந்தியாவிற்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளது. அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இளைஞர்கள், இன்றைய பாரதத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்