புதுச்சேரி: “புதுச்சேரி ஆன்மிக பூமி. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது” என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: ”புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அனைத்து மில்களும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ சிவா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டால் புகழ்பெற்ற ஏஎப்டி, பாரதி, சுதேசி மில்கள் படிப்படியாக மூடப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.
கடந்த 18 மாதங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. குறிப்பாக ஏஎப்டி தொழிலார்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளும் வழங்கப்பட்டன. எனவே சிவா கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. கடந்த ஆட்சியில் சிவா பிப்டிக் நிறுவனத்தின் சேர்மனாக இருந்தார். அப்போது இதன் முன்னேற்றத்துக்காக எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலகட்டத்தில் பல பெரிய தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. இதற்கான விளக்கத்தை சிவா கூறவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாஜக, திமுகவை போல் பிரிவினைவாதத்தை பேசுவதில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரி விமான நிலையத்தை பற்றி பேசக்கூடிய நீங்கள், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி எத்தனை முறை தமிழக முதல்வரை சந்தித்து இதற்காக போராடியிருப்பார், இது பற்றி பேசி இருக்கிறார் என்பதை விளக்கமாக சொல்ல முடியுமா?
இந்தியாவின் ஒரு பகுதி தமிழகம், புதுச்சேரி. இவ்விரு மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் ஒன்றுதான். புதுச்சேரி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் தாமாக முன்வந்து இடத்தை அளிக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வரை, புதுச்சேரி முதல்வர் சந்திக்காததால் இடம் தரவில்லை என்ற போலியான குற்றச்சாட்டை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரி ஆன்மிக பூமி. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திராவிட மாடல் புதுச்சேரியில் எடுபடாது. திராவிட மாடல் என்று நாங்கள் கூறுவது வாரிசு அரசியல், வளர்ச்சியின்மை, ஊழல் என்பதே ஆகும். தமிழகம் என்பது இயற்கையாகவே நல்ல வளம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தால்தான் வாழமுடியும் என்ற ஏழ்மை நிலையை உருவாக்கி வைத்துள்ளீர்கள்.
எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது. மேலும் உங்கள் திராவிட மாடலை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதுச்சேரி மக்களுக்கு கடந்த கால திமுக ஆட்சி பற்றி நன்றாகவே தெரியும். பூட்டிய வீடுகளையும், காலி மனைகளையும் போலி மனைப்பட்டா போட்டு அபகரித்தது பிரெஞ்சு நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடிய நிலையை திமுக உருவாக்கி உள்ளது. எனவே புதுச்சேரி மாநிலத்தில் உங்கள் கனவு ஒருநாளும் பலிக்காது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.