புதுடெல்லி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாணவி படித்துவந்த பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள பொருட்கள் மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கைகளை தங்கள் தரப்பிற்கு வழங்க கோரி மாணவியரின் பெற்றோர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராகவும், ஜிப்மர் மருத்துவமனை அறிக்கையை தங்களுக்கு வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தாயார் செல்வி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “மாணவி மரண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு, மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை. அந்த அறிக்கை மாணவியின் உடலில் இருந்த சந்தேகப்படும்படியான காயங்களை கருத்தில் கொள்ளவில்லை” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மனுவில் தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் ஹரிப்ரியா, கிருத்திகா ஆகியோரும் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.