புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது.

கேம்பிரிட்ஜ் அகராதியின் புதுப்பிக்கப்பட்ட வரையறையில் ஆணுக்கான விளக்கமாக, `பிறக்கும்போது வேறு பாலினத்தைக் கொண்டிருந்தாலும், வளர்ந்த பின்னர் ஆணாக தன்னை அடையாளப்படுத்தி வாழ்பவர்’ என்று சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல பெண்ணுக்கான விளக்கமாக, ‘பிறக்கும் போது வேறு பாலினத்தைக் கொண்டிருந்தாலும், வளர்ந்த பின்னர் பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தி வாழ்பவர்’ என்று கூறப்பட்டுள்ளது.
விளக்கத்துடன், அகராதி இரண்டு உதாரணங்களையும் கொடுக்கிறது. ஆண் குறித்து, ’மார்க் ஒரு திருநம்பி. அவர் பிறக்கும்போது பெண் என்று கூறப்பட்ட ஒரு ஆண்’ என்றும், பெண் குறித்து, ‘மேரி தேசிய அலுவலகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை. அவர் பிறக்கும்போது ஆணாக அறியப்பட்ட பெண்’ என்றும் விளக்குகிறது.
இந்த மாற்றங்கள் ஏற்படுவதுவதற்கு முன், அகராதி ஆசிரியர்கள் சமூகம் முழுவதும் `பெண்’ என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து, அதன் பிறகே மாற்றங்களைக் கொண்டு வந்தனர் என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த வருடத்தில் அதிகமாக அகராதியில் பெண் (woman) என்ற வார்த்தையை மக்கள் தேடியுள்ளதாலும், இந்த வார்த்தைக்கான தேடுதல் 1400% அதிகரித்துள்ளதால் அவர்கள் புதிய வரையறையைப் பற்றி ஆங்கிலம் கற்பவர்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கெனவே ’ஆண்’, ’பெண்’ணுக்குக் குறிப்பிடப்பட்டிருந்த வரையறைகளும் தொடர்கின்றன. கூடுதலாக இந்த விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட வரையறைகளுக்கு வலைதளவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.