புதுடெல்லி: தவாங் பகுதியில் இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விவாதிக்க மறுப்புத் தெரிவித்ததால், மாநிலங்களவையில் இருந்து 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ஸி பகுதி அருகே இந்தியப் படையினருடன், சீனப் படையினர் மோதினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவை கூடியவுடன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எல்லையில் நிகழ்ந்த இந்திய-சீன மோதல் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்காக கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், மாநிலங்களவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்த ஹரிவன்ஷ், இதுகுறித்து விவாதிக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தார். மேலும், கேள்வி நேரத்தையும் அவர் தொடங்கினார்.
கேள்வி நேரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபாஜியா கான், இந்திய-சீனத் துருப்புகள் மோதல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், இந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதி இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட 17 கட்சிகளின் எம்.பி.க்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெளிநடப்பில் ஈடுபட்டுள்ள 17 எதிர்க்கட்சிகளும் நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளன. அதேநேரத்தில், எல்லைப் பிரச்சினையில் சமரசத்துக்கு இடமில்லை. அனைத்தையும்விட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு ஏன் தயாராக இல்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.