திரிஷா எனும் மேஜிக்..! 20 ஆண்டுகளாக 20 வயதிலேயே இருக்கும் ‘குந்தவை’!

Trisha Krishnan Cinema Journey: அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அந்தப் படம், டிசம்பர் 13, 2002 அன்று வெளியானது. திரையுலகில் த்ரிஷா 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1999-ல் பிரசாந்த், சிம்ரன் நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறிய ரோலில் த்ரிஷா நடித்திருந்தாலும், அவர் நாயகியாக அறிமுகமானது “மெளனம் பேசியதே” படத்தில் தான். 

அந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிகை திரிஷா நடித்தார். உனக்கு 20 எனக்கு 18, லேசா லேசா, கில்லி, சாமி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தினார். வர்ஷம் என்னும் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்தப்படம் தான் தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையானார். இவர் கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது இவர் நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி , த ரோட் என அடுத்தடுத்து படங்கள் தயாராகி ரிலீசுக்கு ரவுண்டு கட்டி காத்திருக்கின்றன. இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “பொன்னியின் செல்வன்” படம் 450 கோடிகளை வசூல் செய்தது. இந்த படத்துக்குப் பிறகு மீண்டும் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துள்ளார் தலைவி திரிஷா.

எப்போதுமே இவருக்கு வயதாகிவிட்டதாகவும், 40 வயதை நெருங்கிவிட்டதாகவும் விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு அந்தப் பார்வை மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஐஸ்வர்யா இலட்சுமி, சோபிதா துலிபாலா என இளம் நடிகைகளுடன் நடித்தாலும், அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்து ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார். இதையெல்லாம் தாண்டி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனான காட்சிகளில் கூட மிகவும் நேர்த்தியாக நடித்து அசத்திவிட்டார்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அனைத்து கதாநாயகன்களுடனும் நடித்துவிட்டார். ஹீரோயின்களின் மார்க்கெட் ஒருசில ஆண்டுகள் தான் என்ற பேச்சுகளை எல்லாம் கிளீன் போல்ட் ஆக்கிவிட்டு 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முடிசூட இளவரசியாக வலம் வருகிறார். எத்தனை முன்னணி நடிகைகள் அவ்வப்போது வந்து சென்றாலும், சத்தமே இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பேசு பொருளாவார். 

கில்லி, சாமி, விண்ணைத்தாடி வருவாயா, 96 போன்ற படங்களில் இவரின் ரோல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதோடு அரசியலை மையமாக கொண்டு வெளியான கொடி படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார். இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றாலும் மிகவும் இஷ்டம். இன்றளவும் ட்விட்டரில் அவரிடம் விருது வாங்கிய புகைப்படத்தை தான் அட்டைப் படம் ஆக வைத்துள்ளார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இவருக்கு இருப்பதாகவும் சில அரசியல் கிசுகிசுக்கள் கிளம்பின. வெற்றி, தோல்விகள் மாறலாம் ஆனால் என்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகிறார் திரிஷா. 

இந்த சூழலில் தனது ட்விட்டரில், எனது அன்புள்ள திரிஷாயன்ஸ், உங்களில் நானும் ஒருவராக இருப்பது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். நமக்கு என்றென்றும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இவரது 20 ஆண்டுகால ஹீரோயின் வெற்றிப் பயணம் மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே அனைவரது விரும்பம். மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா என்றுமே ரசிகர்களின் மனதில் ஸ்வீட் 16 திரிஷாவாக தான் வலம் வருவார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.