சென்னை: விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில், தம்பதியரின் குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு, இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர், விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பெண் தனது குழந்தையுடன் ஓசூரில் உள்ள பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.வருமானம் இல்லாததால் ஓசூரில் இருந்து சேலம் வந்து செல்வது சிரமம் எனக் கூறி, தனது விவாகரத்து வழக்கை ஓசூருக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டி, வழக்கை ஓசூருக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும், ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன. தம்பதியர் இடையிலான பிரச்சினை காரணமாக குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் தாய் வேலையில்லாமல் இருந்தால், அவரது அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், தாமாக முன் வந்து இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிடலாம் என நீதிபதி அறிவுறுத்தினார்.
இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, ஜீவனாம்சத் தொகை வழங்க தவறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.