பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படம் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை. வரும் ஜனவரி மாதம்தான் அவர் நடித்த ‘பதான்’ படம் திரைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘Besharam Rang’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஷாருக்கான் தன் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க ‘பதான்’ படத்தை எப்படியும் வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இப்படத்தின் வெற்றிக்காக ஷாருக்கான் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கோயிலில் வழிபட்டதோடு அங்கு வழங்கப்பட்ட குங்குமத்தைத் தனது நெற்றியில் வைத்துக்கொண்டார். மேலும் அங்குத் தன்னை காண வந்த ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். ஷாருக்கான் பாதுகாப்புடன் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி இருக்கிறது. கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு தனது காருக்கு வரும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ஷாருக்கான் மனைவி கெளரி கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

எனவே ஷாருக்கான் வீட்டில் தீபாவளி உட்பட அனைத்து இந்து பண்டிகைகளும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சவுதி அரேபியா சென்று இருந்த ஷாருக்கான் மெக்கா சென்று உம்ரா எனப்படும் வழிபாட்டு முறையைச் செய்தார். மெக்காவில் உம்ரா ஆண்டு முழுவதும் செய்ய முடியும். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
பதானைத் தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் சென்னையில் ஒரு மாதம் தங்கி இருந்தார். இதனை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார்.