இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு :அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்| Dinamalar

கொழும்பு : இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையின், ௨.௨ கோடி மக்கள் தொகையில், சிங்களவர், ௭௫ சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தினர். அதே நேரத்தில் தமிழர்கள், ௧௫ சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. பிறகு அது உள்நாட்டு போராக மாறியது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் வகையில், ௧௯௮௭ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்பட நாடு முழுதும், ஒன்பது மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.

இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இது, ௧௩ஏ திருத்தச் சட்டம் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இந்த சட்டத்தின்படி மாகாண அரசுகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை என, தமிழர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும்படி இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சிங்கள கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் பங்கேற்றன.

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விவாதிக்க உள்ளதாகவும், அடுத்தாண்டு பிப்.,ல் நாட்டின் ௭௫வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன், நிரந்தர தீர்வுக்கான அறிவிப்பை வெளியிடுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாகாணத் தேர்தல்களை உடனடியாக நடத்தும்படியும், பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தரும்படியும் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.