கர்நாடகா: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அரசு மாணவிகள் விடுதியில் அத்துமீறி நடந்துகொண்ட வார்டனை மாணவிகள் கம்பு, கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது. மாண்டியா மாவட்டம் காட்டேரி என்ற கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றிவரும் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கபட்ட மாணவிகள் ஆத்திரத்தில் கம்பு, கட்டைகள் உள்ளிட்டவைகளால் அவரை கடுமையாக தாக்கியதால், அங்கு பரபரப்பு நிலவியது.
நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினரையும் மாணவிகள் உள்ளே விட மறுத்தனர். விடுதியின் கதவை பூட்டிக்கொண்ட மாணவிகள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டனை அடித்து துவைத்தனர். நீண்ட நேரம் போராடி வார்டனை மீட்ட காவல் துறையினர். பாலியல் தொந்தரவு குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.