சென்னை: தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்க உள்ள மாணவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர், “தமிழக முதல்வர் மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் அளித்துள்ளார். முதல்வரின் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனைப்படி அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பொறுப்பை என்னால் முடிந்த அளவுக்கு சரியாக செய்வேன். தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வது தான் எனது முதல் இலக்கு. விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்தும் வகையில் என் பணிகள் இருக்கும். தமிழக முதல்வர் தங்க கோப்பைக்கான போட்டி ஜனவரி மாதம் முதல் தொடங்கும். தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என்று கூறினார்.