திருப்பதி கோயில், கடப்பா தர்காவில் ரஜினிகாந்த்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று ரஜினிகாந்த் தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேதாசீர்வாதம் செய்து வைத்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ளதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

எனக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக அறுவை சிகிச்சை செய்திருந்தேன். சிகிச்சை முடிந்ததும் ஏழுமலையானை அப்போது தரிசித்தேன். அத்துடன் இப்போது வந்து தரிசித்துள்ளேன். மிகுந்த மன நிறைவாகவும், சந்தோஷமாகவும் உள்ளது’ என்றார். இதையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மகள் ஐஸ்வர்யாவுடன் கடப்பாவிலுள்ள அமீன் தர்காவுக்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு அவர் பிரார்த்தனை செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.