லண்டன்,:இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் வாய்ப்பை, தொழிலதிபர் நிரவ் மோடி, 51, இழந்தார்.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அங்கு, கடந்த 2019ல் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக நிரவ் மோடி தரப்பில் முறையிடப்பட்டது.
எனவே, நாடு கடத்துவதை எதிர்த்து அவர் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘நிரவ் மோடியின் மனநிலை சீராக இல்லை, அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
‘அவரை நாடு கடத்துவது அநீதி என்றோ, அடக்குமுறை என்றோ சொல்ல முடியாது. எனவே அவரது மனு நிராகரிக்கப்படுகிறது’ என, உத்தரவிட்டது.
இவரது மனுவை முக்கியத்துவம் வாய்ந்ததுஎன உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தால் மட்டுமே அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, மேல்முறையீட்டு வாய்ப்பையும் நிரவ் மோடி இழந்துவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement