தனியார், பொதுத்துறை நிறுவன வங்கிக் கணக்கு, ஆதார், விவரங்கள் மட்டுமல்ல… பாரத ஸ்டேட் வங்கி, இந்தியர்களின் கொரோனா பரிசோதனை விவரங்கள் என ஏராளமான தகவல்கள் திருட்டுபோயிருக்கின்றன. பிக்பாக்கெட் போன்ற சாதாரண விஷயமல்ல இது, இண்டர்நெட்டுக்குள் நுழைந்தாலே எதெல்லாம் பறிபோகுமோ என்று பதைபதைக்கிற அளவுக்கு இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீதான சைபர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நவம்பர் 23ம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதலில் இருந்து இன்னும் மீளவில்லை. சர்வர்கள் இன்னமும் சீரமைக்கப்படாமல் ஸ்தம்பித்து கிடக்கிறது. இதற்கு முன்பு ஜல் சக்தி அமைச்சகத்தின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இது ஒன்றிய அரசின் இணையதளம் மீதான 2வது தாக்குதல்.
சீனாவில் இருந்து 2 இ-மெயில்கள் மூலம் சர்வர்களை ஹேக் செய்ததாகவும், வாமக்ரை, மிமிகாட்ஸ் மற்றும் டிரோஜன் ஆகிய ரேன்சம்வேர் மூலம் தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணைய பயன்பாடுக்குள் இந்த உலகமே மூழ்கிக் கிடக்கும் நிலையில், இந்தியாவின் மீதான இந்த சைபர் தாக்குதல், இதை தடுக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.சைபர் தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதில், இந்தியாவின் மீதான சைபர் தாக்குதல் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும், இதை எதிர்கொள்ளும் அளவுக்கு இணைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், இணைய வழி தாக்குதல்களை தடுக்கும் வகையில் பட்ஜெட்டில் சைபர் பாதுகாப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும்.
இந்தியாவின் சைபர் செக்யூரிடி ஏஜென்சியான சிஇஆர்டி, தேசிய சைபர் ஒருங்கிணைப்பு கழகம் (என்சிசிசி) மற்றும் தரவு நிர்வாகம் ஆகியவற்றுக்கு தேவையான நிதி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த 2021-22ம் நிதியாண்டில் சைபர் தாக்குதலை எதிர்கொள்ள பாதுகாப்பு நிதியாக ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் மறு மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.213 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. எனினும், கடந்த ஜனவரி மாதம் வரை இதில் ரூ.98.31 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என, நிலைக்குழு அறிக்கை கவலை தெரிவித்திருந்தது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தகவல்படி, சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் எக்ஸ்சேஞ்சை நிர்வகித்து வருகிறது. இதன் மூலம், சைபர் தாக்குதல் குறித்து தானாகவே எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் முக்கிய பணிகள், பொறுப்புகள் மற்றும் பாதுகாப்புக்கான உள் கட்மைப்புகளை ஏற்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, அனைத்து அரசு இணையதளங்களையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, சைபர் தாக்குதல் நடந்துள்ளதா என கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுதவிர 97 சைபர் பாதுகாப்பு தணிக்கை நிறுவனங்களை அமைத்து, பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சைபர் தாக்குதல்கள் இந்தியாவின்மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதும், அதற்கான நிதி குறைவாக செலவிடப்பட்டுள்ளதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லைப்பாதுகாப்புக்கான ராணுவத்தை பலப்படுத்துவது போலவே, கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் தனி நபர்கள், நிறுவனங்கள், அரசு அமைச்சகம், அமைப்புகளின் தகவல்களை திருடும் இணைய அரக்கனை தடுக்க போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யாவிட்டால், இது நாட்டுக்கு பெரும் ஆபத்தாக முடியலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
குறிவைக்கப்படும் மருத்துவத்துறை
கடந்த 2021ல், அமெரிக்காவுக்கு அடுத்து மருத்துவத் துறை சார்ந்த இணையதளங்கள், நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு ஆளான 2வது நாடாக இந்தியா உள்ளது. சுகாதார நிறுவனங்கள், இணைய தளங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் விவரம். உலக அளவிலும், இந்திய அளவிலும் ஒப்பிடுகையில், ‘‘கடந்த 2021ம் ஆண்டில் உலக அளவில் மருத்துவத்துறை மீது 100 சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 11 தாக்குதல்கள் இந்திய மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை உலக அளவில் 61 தாக்குதல்களும், இந்தியாவில் 6 தாக்குதல்களும் மருத்துவ துறை மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் கடந்த 2021ல் 71 லட்சம் ஆவணங்களும், உலக அளவில் 4.2 கோடி ஆவணங்களும் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை உலக அளவில் 86.8 கோடி ஆவணங்கள், இந்தியாவில் 1.9 லட்சம் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா
கடந்த 2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் எப்படிக் கையாள வேண்டும் என்ற வரையறைகளை அந்த மசோதாவில் ஒன்றிய அரசு முன்வைத்தது. இது தனிநபர் தகவல்களை கண்காணிக்க வழி வகுக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், இதில் 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் நாடாளுமன்ற நிலைக்குழு முன்வைத்தது. இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது.
ரான்சம்வேர் வைரஸ்
கடந்த மாத இறுதியில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள், ரான்சம்வேர் வைரஸ் மூலம் இந்த தாக்குதலை நடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வர் முடங்கியதால் கணினிகளில் நோயாளிகள் பற்றி சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை மருத்துவர்கள் பயன்படுத்த முடியாமல்போனது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சர்வர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல லட்சம் நோயாளிகளின் விவரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இவற்றை திிருப்பித்தர ரூ.200 கோடி தர வேண்டும் என ஹேக்கர்கள் நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த புகாரும் வரவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.