புதுடெல்லி: நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பதால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குகிறது. இதற்கு கொலீஜியம் முறை தான் காரணம் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். நாடாளுமன்ற ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதில்: நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது. டிசம்பர் 9ம் தேதி நிலவரப்படி உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1108 நீதிபதிகளில் 777 நீதிபதிகள் மட்டுமே பணிபுரிகின்றனர். மீதமுள்ள 331 நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. டிசம்பர் 5ம் தேதி நிலவரத்தின்படி, உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 27 நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர். 7 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பதுதான் காரணம்.
கொலீஜியம் அமைப்பு மூலம் நீதிபதிகள் நியமிக்கப்படுவது தான் அதிக பணியிடம் காலியாக இருப்பதற்கு காரணம். நீதிபதிகளை நியமிக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் வரை உயர் நீதித்துறையில் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் குறித்த பிரச்னை நீடிக்கும். நவம்பர் 25ம் தேதி கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியிலில் இருந்து 20 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலை அரசு திருப்பி கொலீஜியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் 11 பேர் பெயர்கள் புதியவை. 9 பெயர்கள் கொலிஜியத்தால் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டவை. இந்த ஆண்டில் டிச.9ம் தேதி வரை உயர் நீதிமன்றங்களில் இதுவரை இல்லாத அளவாக 165 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்:
* ஒன்றிய அரசின் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முக அங்கீகாரம் மூலமாக லைப் சர்ட்டிபிகேட் எனப்படும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறையானது கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 8ம் தேதி வரையிலான நிலவரப்படி இதுவரை மொத்தம் 3,71,364லட்சம் ஒன்றிய அரசு ஓய்வூதியதாரர்கள் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.
* பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறித்து பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலமாக 2020ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 60,15,388 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 4,72,866 புகார்கள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு எதிராக மட்டும் 12,54,960 புகார்கள் வந்துள்ளன.
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் அளித்த பதில்: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்கான செலவு அதிகரிக்கவில்ைல. ஒன்றிய அரசின் கொள்கைகள், நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3,723.38கோடி செலவிடப்பட்டுள்ளது.