புதுடில்லி :
விதிமுறையை மீறி ஆசிட் விற்பனை செய்தது தொடர்பாக ஆன்லைன் வர்த்தக செயலிகளான, ‘பிளிப்கார்ட், மீசோ’ ஆகியவற்றுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
சமீபத்தில் புதுடில்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி முகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
ஆசிட் வீசிய முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா, 20, அவருக்கு உதவிய இரு நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால், 19, வீரேந்தர் சிங், 22, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிட் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தக செயலியான, பிளிப்கார்ட் வாயிலாக அவர்கள் ஆசிட் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக செயலிகளான, ‘பிளிப்கார்ட், அமேசான்’ ஆகியவற்றுக்கு, புதுடில்லி மகளிர் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி ஆசிட் விற்பனை செய்தது தொடர்பாக ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பிளிப்கார்ட் மற்றும் மீசோ ஆகிய வர்த்தக செயலிகளுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
விசாரணையில், இந்த நிறுவனங்கள் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement