இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம்; இம்மாதம் 23ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்பத்தில் பட்டியலிடப்பட்ட 991 வீரர்களில் இருந்து 369 வீரர்கள் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு, அணிகளில் இருந்து 36 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் 10 அணிகளுக்காகவும் மொத்தம் 405 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். இவர்களில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் 4 இணை அங்கத்துவ நாடுகளின் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அணிகளுக்கு மொத்தமாக அதிகபட்சம் 87 வீரர்களை வாங்க இடம் இருப்பதோடு இவர்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு 30 இடங்களே உள்ளன.
இதில் இலங்கை சார்பில் இடம்பெற்றிருக்கும் 10 வீரர்களினதும் அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாகும்.
குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, துஷ்மந்த சமீர, பத்தும் நிசங்க, சரித் அசலங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க, தனஞ்சய டி சில்வா ஆகிய இலங்கை அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சர்வதேச ரி20 போட்டிகளில் இதுவரை விளையாடாத துனித் வெல்லாலகே வீரரும் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை இலங்கையின் வனிந்து ஹசரங்க (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர்), மஹீஷ் தீக்ஷன (சென்னை சூப்பர் கிங்ஸ்), பானுக ராஜபக்ச (பஞ்சாப் கிங்ஸ்), மதீஷ் பதிரன (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் அடுத்த ஐ.பி.எல் தொடரில் அவர்கள் விளையாடிய அணிகளால் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.