பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில் சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

2020-ம் ஆண்டில் 5 நாளில் 3 அதிபர்கள் நாட்டை ஆண்டனர். இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோ காஸ்டிலோ நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார். இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். மேலும் பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்தார்.மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

துணை அதிபராக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தன்னை காவலில் இருந்து விடுவிக்குமாறு காஸ்டிலோ தாக்கல் செய்த மனுவை பெரு நாட்டின் நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்கு 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் எதிர்தரப்பு வாதிட்டு வருகிறது.

இந்த நிலையில் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவும், டினா பொலுவார்டே பதவி விலகவும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பல பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.