கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அந்த கடையில் மேலாளராக வேலை பார்த்து வரும் நபர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண் இந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதை கேட்ட, இளம்பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் உடனடியாக அந்த கடைக்கு சென்று அங்குள்ள மேலாளரிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.