விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு; கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரியது சிபிஐ

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கில் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜன. 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் கடந்த2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான டைரியை பறிமுதல் செய்தனர். இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்டன.

இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வந்தனர்.

இந்த வழக்கில் சென்னை சிபிஐநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு சிபிஐகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர்பெயர் மட்டுமே இடம்பெற்றது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது.

இந்த வழக்கு கடந்த முறைசென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், போதுமான விவரங்கள் இல்லை என்பதால் அதை திருத்தம் செய்து, சாட்சிகள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்களுடன் திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே வழக்கை நடத்த மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘‘ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும். யார், யாருக்கு எதிராக இந்த வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என சிபிஐக்குஉத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் ஜன.10-க்குதள்ளிவைத்துள்ளார்.

இதற்கிடையே, வழக்குக்கு தொடர்பில்லாத முடக்கப்பட்ட அசையா சொத்துகளை விடுவிக்க வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி,குற்றப்பத்திரிகையை சிபிஐ முழுமையாக தாக்கல் செய்யாத நிலையில் சொத்துகளை விடுவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.