டெல்லி: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் 20, 21-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியில் நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 20-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்க்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.