தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பெற்றோருக்கு விசேட அறிவிப்பு

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட நாளை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை நாளை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

காலை 09:30 முதல் 10:45 மணி வரை, இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க நேரம் ஒதுக்கப்படும்.

அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு 11:15 மணிக்கு  முதலாவது   வினாத்தாள் வழங்கப்படும்.விடைகளை  எழுதுவதற்காக  நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஒரு மணித்தியால    கால அவகாசம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளன தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைச்சைக்கு இந்த வருடம் மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சார்த்திகளுக்கு முன்னரைப் போன்று அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பரீட்சார்த்திகள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வருகைதந்து, அங்குள்ள படிவத்தில் கையெழுத்திடுவது அவசியமாகும். இது தொடர்பில் பரீட்சார்த்திகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பரீட்சார்த்திகள் காலை 8.45 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும். பரீட்சை எண்ணை தெளிவாகத் தெரியும்படி ஆடையில் அணிந்து வருவது கட்டாயமாகும்.

இதேவேளை நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக இன்று இரவு மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.