`நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 625 கோடிக்கு மேல் முறைகேடு' லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க கோரிக்கை!

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  சுமார் ரூ.625 கோடிக்கு மேல் லஞ்சமுறைகேடு நடைபெறுகிறது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாய சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி முதல்வர் முதல் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரை மனு அனுப்பியுள்ள தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர.விமலநாதனிடம் பேசினோம். அவர் கூறுகையில்,

“நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலிற்கு ரூ.125 – கட்டாய லஞ்சத்தை நிர்ணயித்து , நிகழாண்டு 50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதலில் சுமார் ரூ.625 கோடி, உழவர்களிடம்  வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில ஊழல் லஞ்ச தடுப்பு கண்காணிப்புத்துறை கண்டுகொள்வதில்லை.

நெல் கொள்முதல்

 மாநில, மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறைக்கு, கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் மீது ஆண்டிற்கு 5,000 வழக்குகள் வருகின்றன. இதற்கு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல நூறு கோடி ரூபாய் லஞ்ச மோசடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறுவது குறித்து தமிழ்நாடு அரசு எள்ளளவும் கவலைப்படவில்லை. கடந்த ஆட்சியில் குவிண்டாலிற்கு ரூ.100 – லஞ்சமாக இருந்தது. தற்பொழுது குவிண்டாலிற்கு ரூ.125 -ஆக லஞ்சத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி எடை மோசடி, லஞ்ச மோசடி முறைகேடுகளை களைந்திட அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்த வெளி கிட்டங்கிகள், முதுநிலை மண்டல மேலாளர்கள் அலுவலகங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டுமென  கடந்த 7ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். உருப்படியான நடவடிக்கையே இல்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து 100 கி.கி, எள் 80 கி.கி, நிலக்கடலை 80 கி.கி, பயிறு 100 கி.கி, நெல் 75 கி.கி, பருத்தி 100 கி.கி, துவரை 100 கி.கி, கம்பு 100 கி.கி, கேழ்வரகு 100 கி.கி, மக்காச்சோளம் 100 கி.கி, கொள்ளு 100 கி.கி, சூரியகாந்தி 80 கி.கி, வெல்லம் 75 கி.கி, தேங்காய் 80 கி.கி மூட்டைகளில் எடையிடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நடைமுறை உள்ளது.

சுவாமிமலை சுந்தர.விமலநாதன்

சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், உர ஆலைகள், தீவன ஆலைகள், தவிடு ஆலைகள் அனைத்தும் 50 கி.கி மூட்டைகளைப் பயன்படுத்தி வரும் வேளையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டும் 40 கி.கி மூட்டை பயன்பாடு ஏன்? எனவே, நெல் கொள்முதல் நிலையங்களிலும் 80 கி.கி மூட்டைகளே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் களம், புறம்போக்குகள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்டெடுத்து அதில் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் புதிதாகக் கட்ட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.