இந்திய நிகழ்வுகள்
ஆன்லைனில் ஆசிட் விற்பனை: பிளிப்கார்ட்டுக்கு ‘நோட்டீஸ்’
புதுடில்லி-விதிமுறையை மீறி ஆசிட் விற்பனை செய்தது தொடர்பாக ஆன்லைன் வர்த்தக செயலிகளான, ‘பிளிப்கார்ட், மீசோ’ ஆகியவற்றுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
சமீபத்தில் புதுடில்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி முகத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
ஆசிட் வீசிய முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா, 20, அவருக்கு உதவிய இரு நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால், 19, வீரேந்தர் சிங், 22, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிட் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தக செயலியான, பிளிப்கார்ட் வாயிலாக அவர்கள் ஆசிட் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக செயலிகளான, ‘பிளிப்கார்ட், அமேசான்’ ஆகியவற்றுக்கு, புதுடில்லி மகளிர் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி ஆசிட் விற்பனை செய்தது தொடர்பாக ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பிளிப்கார்ட் மற்றும் மீசோ ஆகிய வர்த்தக செயலிகளுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
விசாரணையில், இந்த நிறுவனங்கள் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
அயோத்தி வளாகத்தில் ‘டான்ஸ்’: 4 பெண் போலீசார் ‘சஸ்பெண்ட்’
அயோத்தி-ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு பெண் போலீசார், சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து நான்கு பேரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பணியில் இருந்த பெண் போலீசார், கவிதா படேல், காமினி குஷ்வாஹா, கஷிஷ் சாஹ்னி, சந்தியா சிங் ஆகிய நான்கு பேரும், ஓய்வு நேரத்தில் போஜ்புரி சினிமா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
ஆனால், அப்போது அவர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை. நான்கு பேரும் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதையடுத்து, நான்கு பேரையும் ‘சஸ்பெண்ட்’ செய்த அயோத்தி மாவட்ட எஸ்.பி., முனிராஜ், துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச் சாராய வியாபாரிகள் 129 பேர் பீஹாரில் கைது
சரண்-பீஹாரில், கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானோர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு விசாரணைக் குழு நடத்திய அதிரடி வேட்டையில், ௧௨9 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சரண் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் ஏராளமானோர் பலியானதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை ௩௦ ஆக உயர்ந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், கள்ளச் சாராய வியாபாரிகள் ௧௨9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ௪,000 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கள்ளச் சாராயம் குடித்து பலியான வர்களின் உண்மையான எண்ணிக்கையை, அரசு மறைக்கப் பார்க்கிறது. இதில், ௫௦ பேர் உயிர்இழந்துள்ளனர் என, எதிர்க் கட்சியான பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம், பீஹார் அரசுக்கும், காவல் துறைக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இதில், நான்கு வாரங்களுக்குள் இச்சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாணவியை மாடியில் இருந்து துாக்கி வீசிய ஆசிரியை கைது
புதுடில்லி-புதுடில்லியில், ஐந்தாம் வகுப்பு மாணவியை கத்திரிக்கோலால் தாக்கியதுடன், முதல் மாடியில் இருந்து துாக்கி வீசிய ஆசிரியையை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மத்திய டில்லியில் பிராத்மிக் வித்யாலயா என்ற மாநகராட்சி பள்ளி உள்ளது.
இங்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஆசிரியை கீதா தேஷ்வால் கத்திரிக்கோலால் தாக்கிஉள்ளார்.
மேலும் அவர், அம்மாணவியை முதல் தளத்தில் இருந்து துாக்கி வீசி எறிந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர், பள்ளி முன் திரண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், ஆசிரியை மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்து, எதற்காக மாணவியை தாக்கினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியை கீதா தேஷ்வாலை, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டது.
தமிழக நிகழ்வுகள்
‘கஞ்சா வேட்டை – 3.0’: 3 நாளில் 403 பேர் கைது
சென்னை-‘கஞ்சா வேட்டை – 3.0’ என்ற அதிரடி நடவடிக்கை துவங்கப்பட்டு, மூன்று நாட்களில், 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க, 2021 டிச., 6ல் இருந்து, ‘கஞ்சா வேட்டை – 1.0 மற்றும் 2.0’ என்ற அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதில், 13 ஆயிரத்து 320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 25 ஆயிரத்து 295 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது; 1,891 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, 36 ஆயிரத்து 875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 521 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகள், 4,023 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன; 616 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, ‘கஞ்சா வேட்டை – 3.0’ என்ற அதிரடி நடவடிக்கை துவங்கப்பட்டு, மூன்று நாட்களில், கஞ்சா வியாபாரிகள், 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 15 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா பதுக்கல் மற்றும் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்க வேண்டும் என, எஸ்.பி., மற்றும் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கி தயாரிப்பு வாலிபர் கைது
சென்னை-தமிழகத்தில் புதிய அமைப்பு துவங்கி, தலைவர்களை கொலை செய்ய துப்பாக்கி தயாரித்த வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி, 25, கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரகாஷ், 24, சின்ன புதுாரைச் சேர்ந்தவர் கபிலன், 27. மூவரும், ‘விடுதலைப் புலிகள்’ அமைப்பின் ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் புதிய அமைப்பு துவங்கி, ஆயுதம் ஏந்தி போராட முடிவு செய்தனர். தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, ‘யுடியூப்’ பார்த்து, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஏற்கனவே நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் பதுங்கி இருந்த கபிலனை, நேற்று கைது செய்தனர்.
பயங்கரவாத செயலுக்கு ஆயுத பயிற்சி பி.எப்.ஐ., அமைப்பு நிர்வாகி கைது
சென்னை-பயங்கரவாத தாக்குதலுக்கு, மதுரையில் ஆயுத பயிற்சி அளித்து வந்த, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சோதனை
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவதாகவும், இதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி திரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், செப்.,22ல், தமிழகம் உட்பட, 15 மாநிலங்களில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன் பின், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
மதுரை, நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த, பி.எப்.ஐ., அமைப்பு நிர்வாகியான, ஆட்டோ ஓட்டுனர் உமர் ஷெரீப், 43, வீட்டில், கத்தி, அரிவாள், வாள், சுருள் கத்திகள் என, பயங்கரவாத ஆயுதங்களை கைப்பற்றினர்.
விசாரணை
விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, உமர் ஷெரீப்புக்கு, ‘சம்மன்’ அனுப்பினர். சென்னையில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் ஆஜரான உமர் ஷெரீப்பை, மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார் படுத்தியதும், ஆயுத பயிற்சி அளித்து வந்ததையும், அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, உமர் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர், 10வது நபர் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ரூ.6.31 கோடி ஹெராயின் கடத்தல்: கென்யா பெண் கைது
சென்னை–ஆசனவாயில் மறைத்து, 6.31 கோடி ரூபாய் மதிப்பிலான, 902 கிராம் ‘ஹெராயின்’ போதைப் பொருளை கடத்தி வந்த, கென்யா நாட்டைச் சேர்ந்த பெண்ணை, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பிரபல நகரான ஷார்ஜாவில் இருந்து, ‘ஏர் அரேபியன்’ விமானம் சென்னை வந்தது. அதில் வரும் பெண் ஒருவர் போதைப் பொருள் கடத்தி வருவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற, கென்யா நாட்டைச் சேர்ந்த இருங்குமேரி முதோனி என்ற பயணியை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, போதைப் பொருள் அடங்கிய பொட்டலங்களை, ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை வெளியே எடுத்து மதிப்பிட்டதில், 6.31 கோடி ரூபாய் மதிப்பிலான, 902 கிராம் ஹெராயின் என்பது தெரிய வந்தது. இருங்குமேரி முதோனியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ரூ.86.27 லட்சம் தங்கம்
துபாய் நகரில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானத்தில் வந்த பயணியை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்களை, அவர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 1,179 கிராம் தங்கம் இருந்தது.
மேலும், 595 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 86.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.774 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக, விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் எம்.மேத்யூ ஜோளி தெரிவித்துள்ளார்.
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது
பெரியகுளம்–பெரியகுளத்தில் அரசு பஸ்சில் கல் எறிந்து கண்ணாடியை உடைத்த தேனியைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தாலுகா மதுராபுரியைச் சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் 50. நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனிக்கு பஸ்சை ஓட்டிச் சென்றார். பெரியகுளம் அருகே கல்லூரி பிரிவு அருகே நள்ளிரவு 2:00 மணிக்கு பஸ்ஸ்டாப் இல்லாத பகுதியில் 6 பேர் பஸ்சை மறித்தனர்.
பஸ் நிற்காததால் செல்வராஜை அவதூறாக பேசி பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை கல் எறிந்து சேதப்படுத்தினர். பிடிக்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஜ., கண்ணன், தேனியைச் சேர்ந்த விக்னேஷ் 20, இவரது நண்பர்கள் நந்தா 20. லோகித் 19. சிவா 20. வசந்த் 20. மகேஷ் 20. ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.-
திருடிய மூவர் கைது
கூடலுார்;நடுவட்டம், பிராஸ்பெக்ட் அருகே உள்ள, தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான பூட்டிய வீட்டில், எஸ்டேட் நிர்வாகம் பல்வேறு பொருட்களை வைத்திருந்தன.
கடந்த, 10ம் தேதி மேலாளர் ஆனந்தன்,வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் ஜன்னலை உடைந்து அதிலிருந்த மின் மோட்டார், பழைய டீசல் மோட்டார், சைக்கிள் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. நடுவட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நடுவட்டத்தை சேர்ந்த முகுந்தன், 30, சுரேஷ்குமார், 32, சுபாஷ், 25, ஆகியோரை கைது செய்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்