இரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், போராடும் மக்கள் மீதான தண்டனைகளையும் கடுமையாக்கி வருகிறார் இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியோ. மேலும் போராட்டக் கூட்டத்தைக் கலைக்க தடியடிகள், பெல்லட் குண்டுகள், துப்பாக்கிச்சூடுகள் என இரான் பாதுகாப்பு படையினர் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, போராட்டத்தில் கைதானவர்களுக்கு அடுத்தடுத்து ஆயுள்தண்டனை, மரண தண்டனை என விதித்து சொந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது இரான் அரசாங்கம்.

கடந்த செப்டம்பர் மாதம், மாஷா அமினி என்ற இளம்பெண் ஒழுங்காக `ஹிஜாப்’ அணியவில்லை எனக்கூறி கைது செய்தது அந்நாட்டின் கலாசாரக் காவல்துறையான `காஸ்த் எர்ஷாத்’. அதன்பின்னர், விசாரணைக் காவலில் இருந்த மாஷா அமினி காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து, மாஷா அமினியின் மரணத்துக்கு நீதி கேட்டும், ஹிஜாப் மற்றும் கலாசாரக் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரானியப் பெண்கள் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கினர். ஹிஜாப்பை எரித்தும், முடிகளை வெட்டியும் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், இரான் அரசாங்கமோ `இவர்கள் அந்நிய நாட்டின் தூண்டுதலோடுதான் அரசுக்கு எதிராகப் போராடுகின்றனர்; நாட்டை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்கின்றனர். கடவுளுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்’ எனக்கூறி போராடும் மக்கள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, போராட்டத்தை ஒடுக்குவதற்காக இரான் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் கண்மூடித்தனமாகத் தாக்கியது. இரான் பாதுகாப்புப்படையினர் நடத்திய தொடர் துப்பாக்கிச்சூட்டில் 68 சிறுவர் சிறுமிகள் உள்பட சுமார் 495 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

சுமார் 18,426 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களில் 160 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மேலும் 160 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 80 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கி தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது இரான் அரசு.

இதுமட்டுமல்லாமல், `போராட்டத்தை பரப்பிய குற்றத்திற்காகவும், பாதுகாப்பு படையினரைக் கொன்ற குற்றத்திற்காகவும் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈரான் அரசு மரணத் தண்டனை விதித்து படிப்படியாக நிறைவேற்றியும் வருகிறது. கடந்த வாரம் அதில், இரண்டு பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனையை நிறைவேற்றி கடுமை காட்டியிருக்கிறது. குறிப்பாக, போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாகக் கூறி மொஷென் ஷெகாரி என்ற நபரை முதல் ஆளாக தூக்கிலிட்டது இரான் அரசு. அடுத்து இரண்டாவது நபராக 23 வயதான மஜித்ரேசா ரஹ்னாவர்டு என்ற இளைஞரை பொதுவெளியில் வைத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றியிருக்கிறது.
இதேபோல, ஒருவர் பின் ஒருவராகத் தூக்குதண்டனை நிறைவேற்ற நாள் குறித்து வருகிறது இரான் அரசு. குறிப்பாக, மஹான் சத்ரத், முகமது மெஹ்தி கராமி என அடுத்தடுத்த நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. மேலும், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கும் தூக்குதண்டனை விதித்திருக்கிறது.

இரானின் இதுபோன்ற இரக்கமற்ற செயல்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. மேலும், ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள், கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்புகளும் கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற பலதரப்பு அழுத்தங்களையும் தாண்டி இரான் அரசாங்கம் தொடர்ச்சியாக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரான் அரசு தன் நாட்டு மக்களுக்கு எதிராகவே தவறான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாக பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.