சட்டமன்றத்தில் சாவக்கர் புகைப்படம்… குட்டையை குழப்ப காத்திருக்கும் பாஜக

Karnataka Belgavi assembly session 2022 : கர்நாடகா – மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இடையே பெல்காவி எல்லை பிரச்னை தற்போது கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக தலைமையில் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். 

இருப்பினும், கர்நாடகாவின் பெல்காவியில் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், மராத்தி பேசும் கர்நாடகா மாநில மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுக்கு ஒருமுறை பெல்காவியில் அம்மாநில அரசு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தும். 

இதற்கென பெங்களூருவில் இருக்கும் விதான சவுதா என்ற மாநில சட்டப்பேரவையை போன்றே, பெல்காவியில் சுவர்ணா விதான சவுதா என்ற இரண்டாவது சட்டப்பேரவை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் வழக்கம்போல் குளிர்கால கூட்டத்தொடர் நடந்தப்படுகிறது. 

தற்போது பெல்காவியில் சட்ட ஒழுங்கை சீர்படுத்தி, அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பெல்காவியில் நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டத்தை கர்நாடக அரசு நடத்த உள்ளது. 

இந்த கூட்டத்தில், எல்லை பிரச்னை, உதவி காவல் ஆய்வாளர் நியமன ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. இந்நிலையில், பெல்காவி சட்டப்பேரவையில் விடுதலை போராட்ட வீரர் சாவாக்கரின் புகைப்படத்தை பாஜக அரசு தற்போது வைத்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

பல்வேறு தலைவர்களின் படங்களை நாளை கூட்டத்திற்கு முன்னதாக கர்நாடக முதலமைச்சர் திறக்க உள்ள நிலையில், அதில் சாவக்கரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. காங்கிரஸ் இதனை கடுமையாக எதிர்க்கும் என கூறப்படுகிறது. சாவக்கர் உடன் உடன்படாத காங்கிரஸ் கட்சி அவரின் புகைப்படம் சட்டப்பேரவையில் இருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும், இந்துத்துவத்தை பாஜக திணிப்பதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கர்நாடகாவில் சாவக்கரை வைத்து நீண்ட நாள்களாக பல பிரச்னைகள் எழுந்து வந்ததும் நினைவுக்கூரத்தக்கது. 

பெல்காவி எல்லை பிரச்சனை தொடர்பாக, கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவின் வாகனங்கள் கர்நாடகாவில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மேலும், கர்நாடகாவின் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை சிவசேனாவின் உத்தவ் தாக்ரே தரப்பு தொண்டர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். 

மேலும், இந்த பிரச்னை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் கடந்த புதன்கிழமை (டிச. 14) அன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 

அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா,”உச்சநீதிமன்றம் இரு மாநில பிரச்னை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை, அந்தந்த மாநில அரசுகள் எவ்வித கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும். இதற்காக, இரண்டு மாநிலங்களை சேர்ந்த மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்” என தெரிவித்தார். 

நாளை பெல்காவியில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்க உள்ள நிலையில், சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மகாராஷ்டிர அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, 1956 மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது, பம்பாய் மாகாணத்தில் இருந்த சில மராத்தி பேசும் பகுதிகள் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது. அப்போதிருந்து, மகாராஷ்டிராவுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதற்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.