தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்ற குழப்பம் நிலவி வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு, முந்திரி, ஏலக்காய், திராட்சை, புத்தாடை உட்பட பொருட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை ரொக்கமாக வழங்கலாமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா என ஆலோசனை நடத்த கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தின் முடிவில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.