ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்: மதுரை, கோவை கோட்டத்தில் விரைவில் அமல்

மதுரை: ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டத்தை மதுரை, கோவை கோட்டத்தில் விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக பயணிகள் ரயில்களில் சரக்கு போக்குவரத்துக்கென, தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சர்வீஸ் சேவை நடைமுறையில் உள்ளது. அது போல தபால்கள் பயணிகள் ரயில்களில் தனி பெட்டிகள் அல்லது சரக்கு பெட்டிகளில் ரயில் மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகின்றன. வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் வசதிக்காக இந்திய ரயில்வேயும் , இந்திய தபால் துறையும் இணைந்து ரயில் பார்சல் சர்வீஸை நடத்துகிறது.

தற்போது சூரத் – வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இச்சேவை செயல்படுகிறது. இச்சேவையில் தபால் துறை வாடிக்கையாளர்களிடமிருந்து சரக்குகளைப் பெற்று ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். பின்பு பார்சல் சேரும் ரயில் நிலையத்திலும் ரயிலில் வந்த பார்சலைப் பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.

இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளரின் இல்லங்களுக்கேச் சென்று சேரும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கும் இத்திட்டத்தை மற்ற பகுதிகளிலும், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களில் அமல்படுத்ததற்கான முயற்சி நடக்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் இந்திய ரயில்வே, இந்திய தபால் துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் திங்கள்கிழமை (டிச.19) காலை 10.30 மணிக்கு மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் முதல் மாடியில் கூட்ட அரங்கில் நடக்கிறது. ரயில்வே வாரிய திட்ட இயக்குநர் ஜி.வி.எல்.சத்ய குமார், மதுரை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா பங்கேற்று திட்ட விளக்கம் குறித்து பேசுகின்றனர். பயன்பெற விரும்பும் வர்த்தகர்களும் பங்கேற்கலாம் என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.