வட கிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு சிவப்பு அட்டை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில்  ஊழல்,வன்முறைக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம்’ என மோடி கூறினார். வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று அந்த மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.  மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று காலை நடந்த வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.  

இந்த நிகழ்ச்சியில் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 வழி சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2-ம் கட்ட பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கருத்தரங்க மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதன்பின்னர் ஷில்லாங்,  மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், உலக கோப்பை கால்பந்தை தொடர்புபடுத்தி  பேசினார்.

 மோடி பேசுகையில்,‘‘ கால்பந்து போட்டியின்போது வீரர்கள் யாரேனும் விதிமுறைகளை மீறி விளையாடினால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர். அதே போல், வடகிழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக வளர்ச்சியின்மை, ஊழல் மற்றும் அமைதியின்மைக்கு  சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஊழல், வேற்றுமை, வன்முறை மற்றும் வாக்கு  வங்கி அரசியலை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. வடக்கிழக்கு பகுதியை  பிளவுப்படுத்துவதற்கு நடந்த முயற்சியை முறியடித்துள்ளோம்.

  கத்தாரில் உலக கோப்பை இறுதி போட்டி  நடைபெறும் நிலையில், ஷில்லாங்கில் கால்பந்து மைதானத்தில்,நடக்கும் பேரணியில் கலந்து கொண்டுள்ளேன். அங்கே கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இங்கே அரசு வளர்ச்சிக்கான போட்டியில் இருக்கிறது. அதுபோன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளைஇந்தியா நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை’’ என்றார்.
பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், ‘‘வடகிழக்கில் முன்பு வன்முறை, தீவிரவாத சம்பவங்கள் நடந்தன. கடந்த 8 ஆண்டுகளில் வன்முறைகள் 70 சதவீதமும், பாதுகாப்பு படையினரின் மீதான தாக்குதல் 60 சதவீதமும் குறைந்துள்ளன. பொதுமக்கள் உயிர் பலி 89 சதவீதம் குறைந்து விட்டது’’ என்றார்.

திரிபுராவில் ரூ.4350 கோடி திட்டங்கள்
திரிபுரா  தலைநகர், அகர்தலாவில் நடந்த விழாவில் பிரதான் மந்திரி வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் 2 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளை பிரதமர் மோடி வழங்கினார். ரூ.4,350 கோடியிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.