மதுரை: தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையைச் சேர்ந்த மாரியப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் மகேஷ், சங்கரன்கோவில் அரசுப்பள்ளியில் 2014ல் 6ம் வகுப்பு படித்தார். வகுப்பை முறையாக கவனிக்காததால் கணித ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதில் மகனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டதால் பார்வை பாதிக்கப்பட்டது. புகார் அளிக்க வேண்டாம்; மருத்துவ செலவை ஏற்கிறோம் என ஆசிரியர்கள் கூறினர். ஆனால், மருத்துவ செலவை ஏற்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதியப்பட்டது.
இதில் எங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, ‘‘ஆசிரியை தாக்கியதால் தான் மனுதாரர் மகனின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தையே பாதிக்கும் என்பதால் இழப்பீடு கோரப்படுகிறது. எனவே, மனுதாரரின் மகனை நெல்லை தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்து, அவரது இடது கண் பார்வையின் நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.